தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்: கவர்னருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்
|தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கியதற்கு கவர்னருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
தற்போது அமலாக்கதுறை வழக்கில் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார். செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும் என்று ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
வேலைவாங்கி தருவதாக கூறி பணமோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளை எதிர்க்கொண்டுள்ளார் செந்தில்பாலாஜி என குறிப்பிட்டுள்ளார். அமலாக்கத்துறை வழக்கை எதிர்கொள்ளும் செந்தில்பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:-
செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை, அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது; மாநிலத்தின் அதிகாரங்களைச் சீர்குலைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் கவர்னர் செயல்படுகிறார்; இவர் சிந்தனையில் வேறு சக்திகள் மேலிருந்து இயக்குகிறதா என்பதை கவனிக்க வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
இந்திய அரசமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்ற எந்த கவலையும் இல்லை, மோடி அரசு சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு செய்வது கவர்னர் ரவியின் வழக்கமாகிவிட்டது. கவர்னருக்கு சொந்த புத்தி கிடையாது. டெல்லியில் சொல்வதை அப்படியே நிறைவேற்றுகிறார் - கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தான் ஒரு சர்வாதிகாரி என்பதை காட்டியிருக்கிறார் கவர்னர் ரவி - முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட்
தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் கவர்னர் ரவி - திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி
அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.எல்.ஏ
ஏதாவது ஒரு குளறுபடி செய்ய வேண்டும் அல்லது குழப்பங்களை விளைவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் கவர்னர் ரவி நினைக்கிறார். இவருடைய செயல்கள் எல்லாம் வம்புக்கு இழுப்பதைப் போல இருக்கிறது. தொடர்ச்சியாக மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். இதற்கு தமிழ்நாடு அரசு சரியான பாடத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது - கொளத்தூர் மணி, தி.வி.க.
பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஒரு சட்டப்பேரவை உறுப்பினரோ, அமைச்சரோ நீதிமன்றத்தால் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டால் அவர்கள் பதவி இழக்கும் சூழல் ஏற்படும்; வேறு எந்த முகாந்திரத்தின் அடிப்படையிலும் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய முடியாது; இந்திய வரலாற்றில் இது போன்ற ஒரு அரசியல் சட்ட அவமதிப்பு என்றுமே நடந்ததில்லை; இதை அனுமதித்தால் நாளை எந்த மாநிலத்திலும் அமைச்சரவை முழுமையாக நீக்கப்படும் அபாயம் உள்ளது - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்
அரசியல் சாசனத்தின் விழுமியங்களைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் கவர்னர் ரவியின் செயல்பாடுகள் உள்ளது; பாஜக அரசால் அனுப்பப்பட்டுள்ள ஏஜெண்டான கவர்னரின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன; தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டு இருக்கிறார் - மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா