< Back
மாநில செய்திகள்
தோகைமலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கரூர்
மாநில செய்திகள்

தோகைமலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
7 July 2023 11:48 PM IST

தோகைமலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

போக்குவரத்திற்கு இடையூறு

கரூர் மாவட்டம், தோகைமலையில் உள்ள குளித்தலை-மணப்பாறை மெயின் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்கள் சிலர் தங்களது கடைகளின் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மேலும் கொட்டகை அமைத்ததற்கு நெடுஞ்சாலை துறையினர் அதிக வாடகை வசூல் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் தமிழ்செல்வன் தலைமையில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கோகுல்நாத், சாலை ஆய்வாளர் குழந்தைதெரசா மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குளித்தலை-மணப்பாறை மெயின் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

அப்போது, சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருகிற 10-ந்தேதிக்குள் குளித்தலை- மணப்பாறை மெயின் சாலையின் இருபுறங்களிலும் அளவீடு செய்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்படும்.

அதற்குள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களே அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்