திண்டுக்கல்
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|திண்டுக்கல்லில் மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் பல்வேறு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. அதேபோல் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கோரிக்கை விடுப்பது வழக்கமாக உள்ளது. இதை தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
அதையடுத்து வாரந்தோறும் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடக்கிறது. அதன்படி திண்டுக்கல் கிழக்கு ரதவீதி, சோலைஹால் சாலை பகுதிகளில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதையொட்டி நகரமைப்பு அலுவலர்கள் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் அந்த பகுதிக்கு வந்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதில் ஒருசில கடைக்காரர்கள் சாக்கடை கால்வாய், சாலையை ஆக்கிரமித்து சுவர் கட்டி இருந்தனர். மேலும் சிலர் சாக்கடை கால்வாயில் சிலாப்பு அமைத்து கடைகள் வைத்து இருந்தனர். அவை அனைத்தையும் பொக்லைன் எந்திரம் மூலம் நகரமைப்பு அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதுதவிர சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளின் விளம்பர பலகைகள், அனுமதி இல்லாமல் வைத்திருந்த விளம்பர பதாகைகளை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.