கள்ளக்குறிச்சி
சின்னசேலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி: அதிகாரிகள் நடவடிக்கை
|சின்னசேலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
சின்னசேலம்,
சின்னசேலம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சாலைகளை சிலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வந்ததால், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டதுடன், அடிக்கடி விபத்துகளும் நடந்து வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் வருவாய்த்துறை, காவல்துறை, பேரூராட்சி நிர்வாகம் கலந்து ஆலோசித்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தது. இதையடுத்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா, வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, செயல் அலுவலர் உஷா, பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ், துணைத் தலைவர் ராகேஷ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அம்சாகுளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சின்னசேலம் பஸ் நிலையம் வரை நேற்று சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து அண்ணாநகர் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.