கள்ளக்குறிச்சி
தியாகதுருகத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி - செயல் அலுவலர் நடவடிக்கை
|தியாகதுருகத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் பஸ் நிலையத்தில் இருந்து புக்குளம் பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலை மற்றும் திருவண்ணாமலை செல்லும் சாலையின் இருபுறத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி, பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுத்தார். அதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று பொக்லைன் எந்திரம் உதவியுடன் சாலையோரங்களை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்படிருந்த தகர கொட்டகைகள், கடைகளின் பெயர் பலகைகள், பேனர்கள், தள்ளுவண்டிகள், கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது இளநிலை உதவியாளர் கொளஞ்சியப்பன், கார்த்திகேயன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ், குடிநீர் திட்ட பராமரிப்பாளர் சம்பங்கி கண்ணன், வெங்கடேசன், பழனி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது தியாகதுருகம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.