தேனி
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|தேனியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
தேனி நகர் கம்பம் சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக தள்ளுவண்டிகளும், பெட்டிக்கடைகளும் இருந்தன. கடந்த 3 ஆண்டுகளாக அந்த கடைகள், தள்ளுவண்டிகள் எந்த பயன்பாடும் இன்றி, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால், அந்த பகுதியை மதுப்பிரியர்கள் திறந்தவெளி மதுபான பார் ஆக பயன்படுத்தி வந்தனர். மேலும் திறந்தவெளி கழிப்பிடமாகவும் அப்பகுதி மாறியதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. மதுப்பிரியர்கள் மது குடித்துவிட்டு அங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய சம்பவங்களும் நடந்தன. இதனால், எந்த பயன்பாடும் இன்றி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த தள்ளுவண்டிகள், பெட்டிக்கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நேற்று அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் பார்வையிட்டார். நீண்டகாலமாக பயன்பாடு இன்றி கிடந்த தள்ளுவண்டி கடைகள், பெட்டிக்கடைகள் அங்கிருந்து கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டன.