சென்னை
கொடுங்கையூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதம்
|கொடுங்கையூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர் வடக்கு நிழற்சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உதவி பொறியாளர் ஹரிதாஸ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு பெட்டிக்கடைகள் மற்றும் அங்கிருந்த பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் ஏற்றினர். அப்போது அங்குள்ள இட்லி கடைக்குள் புகுந்து பொருட்களை எடுத்தபோது இட்லி மாவு கீழே கொட்டியது.
இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள், சாலையோர ஆக்கிரமிப்புகளை மட்டும் தானே அகற்ற வேண்டும். கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை எப்படி எடுக்கலாம்? என்று கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் கொடுங்கையூர் முத்தமிழ்நகர் வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் வந்த வாகனங்களை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
அங்கு வந்த கொடுங்கையூர் போலீசார் வியாபாரிகளை சமாதானம் செய்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்த பொருட்களை மீண்டும் வியாபாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு மாநகராட்சி வாகனங்களை வியாபாரிகள் விடுவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.