கரூர்
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
|பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது.
தோகைமலை அருகே உள்ள ஊர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 3-ந்தேதி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், ஊர்நாயக்கன்பட்டியில் உள்ள பொம்மக்காள் கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் பொது பாதையில் அதே ஊரை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து நடுபாதையில் கொட்டகை அமைத்து உள்ளார். இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு பாதை இல்லாமல் இடையூறாக உள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லையாம். இந்தநிலையில் பழனிச்சாமியின் தாயார் நல்லம்மாள் வயது முதிர்வால் நேற்று முன்தினம் இறந்து உள்ளார். இவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு பாதை வசதி இல்லாமல் தவித்து வந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் முனிராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் அங்கு வந்து, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினர். இதையடுத்து நல்லம்மாளிடன் உடல் அந்த வழியாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.