காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
|காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரம் பொன்னேரிக்கரை ஏரி கரையையொட்டி 10-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பொன்னேரிக்கரையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மாவட்ட கலெக்டரை சந்தித்து அந்த பகுதி பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கிடவும், வீடுகளை இடித்து அகற்றும் நடவடிக்கையை கைவிடவும் கோரிக்கை விடுத்ததன்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது அன்று கைவிடப்பட்டது.
இதனையடுத்து ஏகாம்பரநாதர் கோவில் மாடவீதி பகுதியிலுள்ள 82 வீடுகள் அகற்றப்படவுள்ளதாக பொதுப்பணிதுறையினர் தெரிவித்திருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியர் சீசர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சாமுண்டீஸ்வரியை வலுகட்டாயமாக போலீசார் தூக்க முயன்றபோது அவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நந்தினி என்கிற 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி தடுத்தனர்.
காஞ்சீபுரம் தாசில்தார் பிரகாஷ், பொதுப்பணித்துறை இளம் பொறியாளர் மார்க்கண்டன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறை பொதுப்பணித்துறை ஊழியர்கள் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகள் இடிக்கும் பணியை தொடர்ந்து செய்தனர்.