கடலூர்
விருத்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
|விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றிலும் சிலர் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு கோவிலின் கலை அழகை பாதிக்கும் வகையில் இருந்த 32 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தேர் நிறுத்தும் பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டதால் அவ்விடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் சன்னதி வீதியில் கோவிலின் முன்புற பகுதியில் இருந்த 10 கடைகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி கோவில் சன்னதி வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நேற்று காலையில் இந்து சமய அறநிலையத்துறை கடலூர் உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர்கள் மாலா, பழனியம்மாள், விருத்தாசலம் தாசில்தார் தனபதி மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அப்போது ஆக்கிரமிப்பாளர்கள், தங்களுக்கு ஒருவாரம் கால அவகாசம் வேண்டும், ஆக்கிரமிப்பை தங்களாகவே அகற்றிக் கொள்கிறோம் என்றனர். அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்து பல நாட்கள் ஆகிவிட்டது. இனிமேல் கால அவகாசம் கொடுக்க முடியாது, என தெரிவித்தனர். இதனை ஏற்ற ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்வதாக கூறி விட்டு ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டனர். அப்போது விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.