திருவாரூர்
கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் பணியிடை நீக்கம்
|கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் பணியிடை நீக்கம்
அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொக்லின் எந்திர உரிமையாளர்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள மரக்கடை ஆர். ஜி.எஸ். தோட்டம் தெருவை சேர்ந்தவர் விஜயராகவன். இவர் தனது பொக்லின் எந்திரம் மூலம் கடந்த 4 மாதங்களாக நகராட்சி பணிகளுக்கு வேலை பார்த்தது தொடர்பாக வாடகை பணம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை தரும்படி நகராட்சி ஆணையர் குமரிமன்னனிடம் கேட்டுள்ளார்.
நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீராவும், விஜயராகவனுக்கு உடனடியாக பணத்தை வழங்குமாறு ஆணையரிடம் கூறியுள்ளார். ஆனாலும் ஆணையர் வாடகை பணத்தை வழங்கவில்லை என்று தெரிகிறது.
ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக...
பொக்லின் எந்திர வாடகைக்கு தர வேண்டிய பணத்திற்கு ஆணையர் குமரிமன்னன் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம், முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு விஜயராகவன் புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் நடத்திய விசாரணையில், நகராட்சி ஆணையர் உள்நோக்கத்துடன் செயல்பட்டது தெரிய வந்தது.
வட்டியுடன் வழங்க உத்தரவு
மேலும் பாதிக்கப்பட்ட விஜயராகவனுக்கு உரிய வாடகை தாமதமாக கொடுக்கப்படுவதால் வாடகை தொகையோடு சேர்த்து வட்டியையும் கொடுக்க உத்தரவிட்டது.
ஆனால் உத்தரவுப்படி நகராட்சி ஆணையர் பணம் கொடுக்கவில்லை. கடந்த 8-ந் தேதி வாடகை பணத்தை பெறுவதற்கு விஜயராகவன் தனது குடும்பத்துடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது ஆணையர் இல்லாததால் நகராட்சி மேலாளரிடம் வாடகை பணம் குறித்து விஜயராகவன் கேட்டுள்ளார். அப்போது ஆணையர் விடுமுறையில் உள்ளார். அவர் வந்ததும் அவரிடம் பேசுங்கள் என்று மேலாளர் கூறினார்.
தீக்குளிக்க முயற்சி
இதனால் வாடகை பணம் கிடைக்கவில்லையே என்று விரக்தி அடைந்த விஜயராகவன், தான் கேனில் மறைத்து வைத்து இருந்த டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த நகராட்சி பணியாளர்கள் விஜயராகவனை தடுத்து காப்பாற்றினர். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் விஜயராகவன் தர்ணா போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா, போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டபாணி ஆகியோர் விஜயராகவனிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து விஜயராகவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார்.