மதுரை
அண்ணாமலை வீட்டு முன்பு கொடிக்கம்பம் அகற்றம்: புதூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|அண்ணாமலை வீட்டு முன்பு கொடிக்கம்பம் அகற்றியதால் புதூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னையை அடுத்த பனையூரில் அண்ணாமலை வீட்டு முன் நடப்பட்ட பா.ஜ.க. கொடி கம்பத்தை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை புதூர் பஸ் நிலையத்தில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரதீய ஜனதா கட்சி சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கொடிக்கம்பம் நடப்பட்டு கட்சி கொடியேற்றப்படும். சிலர் கொடிக்கம்பம் இருக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. கொடி கம்பத்தை அகற்றி உள்ளனர். அதே பகுதியில் விடுதலைச்சிறுத்தை கட்சி தி.மு.க. கொடி கம்பம் இருப்பது காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்றார். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி ரகு, பிரசார பிரிவு மதுரை மாவட்ட பார்வையாளர் புதூர் சரவணன், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.