< Back
மாநில செய்திகள்
துணை மின்நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கரூர்
மாநில செய்திகள்

துணை மின்நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
9 Oct 2022 12:21 AM IST

குளித்தலை அருகே தண்ணீர் பள்ளி பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புறம்போக்கு இடம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட தண்ணீர் பள்ளி பகுதியில் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சீனிவாசா நகர் உள்ளது. இந்த நகர் பகுதி அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று இந்தப் பகுதிக்கு குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த சென்றனர்.

போராட்டம்-தற்கொலை முயற்சி

அப்போது சீனிவாச நகர் பகுதியில் குடியிருந்து வருவோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக போலீசார் அவரை தடுத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அப்பகுதியில் உள்ள இடத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள், தென்னங்கன்றுகள், தென்னை மரங்கள் ஆகியவற்றை பிடுங்கி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.

புறம்போக்கு இடம்

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது தங்களுடைய தாய் தந்தையான சீனிவாசன் சுப்புலட்சுமி தம்பதியினர் அவருடைய சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் பர்மாவில் வசித்து வந்தபோது பர்மா அரசு அவர்களின் இடங்களை கையகப்படுத்தியதன் காரணமாக இந்த 3 குடும்பத்தைச் சேர்ந்த 18 குழந்தைகள் உட்பட 24 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். திருச்சியில் தங்கி இருந்த அவர்களுக்கு அப்போதைய தி.மு.க. ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி சந்தித்து தங்கள் வசிக்க இடம் கேட்டதன்பொருட்டு அகதிகள் மறுவாழ்வு திட்டம் மூலம் தண்ணீர் பள்ளி பகுதியில் 7 ஏக்கர் 30 சென்ட் இடத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கி விவசாயம் செய்து கொள்ள 7.30 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் தரப்பட்டது.

1968 முதல் தங்கள் குழந்தைகளுடன் தங்கி விவசாயம் செய்தோம். சிறு குழந்தைகள் பெரியவர்களான பிறகு அதே இடத்தில் தனித்தனியாக குடும்பமாக வசிக்கத் தொடங்கினோம். திருச்சி - கரூர் புதிய புறவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது இந்த 7.30 ஏக்கர் இடத்தில் சுமார் ஒரு ஏக்கர் இடம் சாலை அமைக்க எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியில் நாங்கள் வசிப்பதால் ராஜேந்திரம் ஊராட்சியில் வீட்டு வரி கட்டி வருகிறோம்‌. விவசாயம் செய்து வரும் நிலத்திற்கும் வரி செலுத்தி வருகிறோம். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இப்பகுதி இருந்தபோது தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு மனு அளித்தபோது, நீண்ட குத்தகைக்கு இடத்தை வழங்கலாம் என கூறப்பட்டது. பின்னர் நீண்ட குத்தகை முறையை நீக்கி வசித்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து நாங்கள் பட்டா கேட்டு மனு அளித்து வந்தோம்.

பெயர் மாற்றம்

அரசு புறம்போக்கு இடம் என்று வருவாய் துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்ட இந்த இடம் 1986-ல் சுடுகாட்டு பகுதி என்று மாற்றப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து பட்டா கேட்டு அகதிகள் மறுவாழ்வு திட்டத்துறை அதிகாரிகளுக்கு மனு அழைத்ததன் விளைவாக சுடுகாட்டு பகுதி என்று அறிவிக்கப்பட்டதை ரத்து செய்து அவர்களுக்கு பட்டா வழங்க அப்போதிருந்த அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னரும் தற்போது வரை தங்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறை மூலம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் குளித்தலை பகுதியில் துணை மின் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்த போது சீனிவாசா நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்க இடம் பார்க்கப்பட்டது.

அப்போதுசீனிவாசா நகர் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க தேவையான 3 ஏக்கர் நிலம்போக மீதம் உள்ள இடத்தை தங்களுக்கு விவசாயம் செய்து கொள்ள வழங்குமாறு தெரிவித்துவந்தோம். ஆனால் அதிகாரிகள் இதற்கு செவி சாய்க்கவில்லை. தற்போது நாங்கள் குடியிருக்கும் கட்டிடப் பகுதிக்கு பின்புறம் உள்ள இடத்தில் பயிரிட்டுள்ள வாழை மரங்கள் தென்னம்பிள்ளைகள் தென்னை மரங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவு

இப்பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது துணை மின் நிலையம் அமைப்பதற்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 5 ஏக்கர் நிலத்தில் உள்ள மரங்கள் அகற்றி அப்புறப்படுத்தும் பணி நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்