< Back
மாநில செய்திகள்
விழுப்புரம், ரிஷிவந்தியத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம், ரிஷிவந்தியத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
21 March 2023 12:15 AM IST

விழுப்புரம் மற்றும் ரிஷிவந்தியத்தில் குளம், வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் பழமைவாய்ந்த திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. இந்த நிலையில் திரவுபதியம்மன் கோவிலுக்கு சொந்தமான ஊரல் கரை குளத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால் குளத்தில் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே ஏந்தல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பும்போது, உபரி நீர் மரூர் ஏரிக்கு செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது. ஏந்தல் மயானம் அருகே செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது. இதனால் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றகோரி மோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்பேரில் உயர்நீதிமன்றம் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நேற்று சங்கராபுரம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரசாந்த் மேற்பார்வையில் பகண்டைகூட்டுரோடு போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்த பணியின்போது, ரிஷிவந்தியம் வருவாய் ஆய்வாளர் சங்கீதா மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்