< Back
மாநில செய்திகள்
கரூர் காமராஜ் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கரூர்
மாநில செய்திகள்

கரூர் காமராஜ் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
7 Oct 2023 11:28 PM IST

கரூர் காமராஜ் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

திடீர் ஆய்வு

கரூர் மாநகராட்சி புதிய ஆணையராக சரவணகுமார் கடந்த 5-ந்தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து கரூர் பஸ்நிலையம், மினி பஸ்நிலையம், கரூர் காமராஜ் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைக்காரர்களிடம் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள கடையின் அளவிற்கு மட்டுமே இடங்களை பயன்படுத்த வேண்டும், கடையின் முன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தானாக துன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தி சென்றார். இந்நிலையில் கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள், அவர்களின் கடைகள் முன்பு இருந்த பந்தல்கள், ஷீட்டுகள், பெட்டிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

அப்போது காமராஜ் மார்க்கெட் பகுதியில் உள்ள கடையின் முன்பிருந்த சாக்கடை வாய்க்கால்களை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இதுகுறித்து கரூர் காமராஜ் மார்க்கெட் சங்க தலைவர் அசோக்குமார் கூறும்போது, மாநகராட்சி ஆணையர் கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என கூறி சென்றார். இதனையடுத்து அவரின் ஆணைக்கிணங்க கரூர் காமராஜ் மார்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து வியாபாரிகள் அகற்றிக்கொண்டோம். வருங்காலத்திலும் மாநகராட்சிக்கு கரூர் காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம், என்றார். இதேபோல் கரூர் பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறும் பகுதியில் உள்ள ஓட்டல்கள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட கடைகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்கள் தாமாக முன்வந்து அகற்றிக் கொண்டனர்.

மேலும் செய்திகள்