கரூர்
கரூர் பஸ்நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|கரூர் பஸ்நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மாநகராட்சியில் புகார்
கரூர் பஸ்நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதேபோல் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இடமாக கரூர் பஸ்நிலையம் உள்ளது. கரூர் பஸ்நிலையத்தில் டீக்கடை, பேக்கரி, ஓட்டல் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளும் பஸ் நிலையத்தில் உள்ளன. இந்நிலையில் பஸ்நிலையத்தில் கடைகள், தள்ளுவண்டி கடைகள் ஆகியவை பஸ்நிலையத்தை ஆக்கிரமித்து இருப்பதாக கரூர் மாநகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளன.
இதனையடுத்து பஸ்நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் கரூர் பஸ்நிலையத்தில் நேற்று நகரமைப்பு அலுவலர் மார்ட்டின் மற்றும் வருவாய் ஆய்வாளர் ரகுபதி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அப்போது பஸ்நிலையத்தில் இருந்த தள்ளுவண்டி கடைகளை அகற்றினர். தொடர்ந்து பஸ்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மூட்டைகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை அகற்றி மாநகராட்சி லாரியில் ஏற்றினர். பின்னர் பஸ்நிலையத்தில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த டீக்கடைகள், பேக்கரி கடைகள் உள்ளிட்ட கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டிகள், டேபிள்கள் ஆகியவற்றை அகற்றினர்.
அப்போது கடைக்காரர்கள் நடைபாதையில் வைத்திருந்த பொருட்களை உடனடியாக அகற்றி கடைகளுக்குள் எடுத்து சென்றனர். ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.