அரியலூர்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மரிய மைக்கேல் ராஜ். மாற்றுத்திறனாளியான இவர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அதில், அவர் குடியிருக்கும் தெற்கு தெருவில் சுமார் 2 மீட்டர் அளவிற்கு ஆக்கிரமித்து வீட்டிற்கான சுற்றுச்சுவர் மற்றும் மாடிப்படி உள்ளிட்டவைகளை அப்பகுதியினர் கட்டியுள்ளனர். இதனால் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைபட்டுள்ளதால் மழைக்காலங்களில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து தெருக்களில் தேங்குகிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளியான அவர் பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனம் செல்வதற்கு கூட இடமில்லாமல் தெருவில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன் மற்றும் திருமானூர் போலீசார் அங்கு வந்தனர். மேலும் வருவாய் துறையினர் அந்த தெருவினை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.