< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சி
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
22 Sept 2023 2:22 AM IST

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

சமயபுரம்:

போக்குவரத்து நெரிசல்

மண்ணச்சநல்லூைர அடுத்த திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அரச மரத்தில் இருந்து சிவன் கோவில் வரை சாலையின் இரு புறங்களிலும் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கு கூடும் வாரச்சந்தைக்கு சுமார் 20 கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் துடையூரில் விபத்துகள் ஏற்பட்டால் பெங்களூரு, சேலம், நாமக்கல் போன்ற ஊர்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிறுகாம்பூர், திருப்பைஞ்சீலி, மண்ணச்சநல்லூர் வழியாகத்தான் திருச்சிக்கு செல்ல வேண்டும். அது போன்ற நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் மண்ணச்சநல்லூரில் இருந்து சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருப்பைஞ்சீலி கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று 15 நாட்களுக்கு முன்பே நெடுஞ்சாலைத் துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் நேற்று நெடுஞ்சாலைத்துறை லால்குடி உதவி கோட்ட பொறியாளர் பாலசுந்தரம், மண்ணச்சநல்லூர் செயற்பொறியாளர் கெஜலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் 2 பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

மேலும் செய்திகள்