திருவள்ளூர்
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
|திருத்தணி முருகன் கோவிலில் நடைபாதையில் கட்டப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றியதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது. இதில் 21-ந் தேதி அஸ்வினி விழாவும், 22-ந் தேதி பரணி விழாவும், 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்பத திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆடிக்கிருத்திகை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு செய்யவேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முருகன் மலைக்கோவில், சரவண பொய்கை மலை அடிவாரம், மலை கோவில் படிக்கட்டுகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.
பின்னர் ஆடி கிருத்திகை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு வருவாய்த் துறையினர் மற்றும் கோவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் விஜயா, திருத்தணி தாசில்தார் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் கோவில் ஊழியர்கள், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் சன்னதி தெரு பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் மலை அடிவார பகுதிகளிலும் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றினர்.
இதேபோல் கோவில் மேல் உள்ள பழக்கடை, பூக்கடை, பிரசாத கடை, குளிர்பான கடை உள்ளிட்ட 13 கடைகளின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு கோவில் துணை ஆணையர் தெரிவித்தார்.
இரண்டு தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் இல்லையென்றால் பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு கடை நடத்துபவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளை கண்டித்து கோவில் வளாகத்தில் கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் அதிகாரிகள் முறையாக ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ் வழங்கவில்லை. கடைகளை ஏலம் எடுக்கும்போது இது குறித்து தெரிவித்திருந்தால் கடைகளை ஏலம் எடுத்திருக்க மாட்டோம். கொரோனா காலத்தில் கடை நஷ்டத்தை சந்தித்துள்ளோம் என வேதனையுடன் தெரிவித்தனர். இந்த போரட்டத்தால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.