< Back
மாநில செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தினத்தந்தி
|
18 May 2023 11:04 PM IST

சிங்கப்பெருமாள் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியாகும் அங்கு அனுமந்தபுரம் செல்லும். சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. அங்கு வியாபாரம் செய்வோர் சாலையை ஆக்கிரமித்து மேற்கூரைகள் மற்றும் சாலையோரங்களில் வரிசையாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த சாலையையொட்டி புகழ்பெற்ற பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. அதன் பேரில் மாநில நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி எச்சரிக்கை விடுத்தனர். இதனை காற்றில் பறக்க விட்ட வியாபாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று காலை மாநில நெடுஞ்சாலை துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது வியாபாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் காலஅவகாசம் கேட்டு கொண்டதன் பேரில் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று 2 பொக்லைன் எந்திரத்துடன் வந்த நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ஆனந்த கல்யாணராமன், உதவி பொறியாளர் கோமதி, சாலை ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் குறிப்பிட்ட எல்லையை மீறி வைத்திருந்த கடைகள் மற்றும் பெயர் பலகைகளை இடித்து தள்ளினார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருவானைக்கோவில் கிராமத்தில் 2 ஏக்கர் 85 சென்ட் அளவுள்ள அரசு நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த 43 பேர் சில நாட்களுக்கு முன்னர் இரவோடு இரவாக தென்னங்கீற்று கொண்டு கொட்டகை அமைத்து ஆக்கிரமித்திருந்தனர்.

இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. இருப்பனும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நேற்று தாசில்தார் சுந்தரமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தென்னங்கீற்று கொட்டகை அனைத்தும் அகற்றப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்பு நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.2 கோடியே 88 லட்சம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்