விழுப்புரம்
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
|விழுப்புரம் மருதூர் ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.
விழுப்புரம் வி.மருதூர் ஏரி மற்றும் ஏரிக்கரை பகுதியை 390 பேர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகள் என கட்டிடங்களை கட்டி பயன்படுத்தி வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த ஆக்கிரமிப்புகளால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்கு நாள் சுருங்கி வருவதோடு ஏரிக்கு நீர்வரத்து வருவதும் தடைபட்டது. இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி வி.மருதூர் ஏரிக்கரை பகுதியான சின்னப்பா நகர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியை மேற்கொண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 5 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து, தினந்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும். எனவே ஆக்கிரமிப்புதாரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாற்று இடம் வழங்க நடவடிக்கை
இதனிடையே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், அங்குள்ள மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அந்த சமயத்தில் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக அவ்வழியாக சென்ற டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அப்பகுதி மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாற்று இடம் வழங்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.