< Back
மாநில செய்திகள்
பழுதடைந்த மின்கம்பங்கள் அகற்றம்
நீலகிரி
மாநில செய்திகள்

பழுதடைந்த மின்கம்பங்கள் அகற்றம்

தினத்தந்தி
|
21 Aug 2023 11:00 PM GMT

கூடலூரில் பஸ் நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின் கம்பங்கள் நடும் பணி நடைபெற்றது.

கூடலூர்

கூடலூரில் பஸ் நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின் கம்பங்கள் நடும் பணி நடைபெற்றது.

பஸ் நிலைய விரிவாக்க பணி

கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர வெளிமாநில பஸ்களும் இயக்கப்படுகிறது. கூடலூரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன.

இதனால் கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையோரம் பஸ்களை நிறுத்த வேண்டிய நிலை காணப்பட்டது. இதன் காரணமாக வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் பயணிகளும் சாலையோரம் காத்து நிற்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு ரூ.4.75 கோடி செலவில் பஸ் நிலைய விரிவாக்க பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

பழைய மின்கம்பங்கள் அகற்றம்

தற்போது 80 சதவீத பணிகள் நடைபெற்று உள்ளது. முன்னதாக விரிவாக்க பணிக்காக பஸ் நிலையம் அருகே உள்ள ராட்சத மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.ஆனால், அப்பகுதியில் உள்ள பழைய மற்றும் பழுதடைந்த மின் கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்து வந்தது. இதனால் கூடலூர் பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.தொடர்ந்து பஸ் நிலைய விரிவாக்க பணி நடைபெறும் இடத்தில் உள்ள பழுதடைந்த 4-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின் கம்பங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் உள்ள பாதுகாப்பான இடங்களில் நடும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் புதிய மின் கம்பிகள் பொருத்தப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, பஸ் நிலையம் மற்றும் பணிமனைக்கு செல்ல சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. தொடர்ந்து புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்