ராமநாதபுரம்
கச்சத்தீவில் புத்த வழிபாட்டு தலம் அகற்றம்
|கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் அமைத்த புத்த வழிபாட்டு தலம் அகற்றப்பட்டு விட்டதாக யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
ராமேசுவரம்,
கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் அமைத்த புத்த வழிபாட்டு தலம் அகற்றப்பட்டு விட்டதாக யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
கச்சத்தீவு
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.
கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் முகாம் அமைத்து, அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத்தை தவிர வேறு எந்த வழிபாட்டு தலமும் இல்லாமல் இருந்த நிலையில் அங்கு இலங்கை கடற்படையால் சமீபத்தில் புத்தர் சிலை அமைத்து அங்கு வழிபாட்டு தலம் உருவாக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு, தமிழக மீனவர்களும் அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து அந்த வழிபாட்டு தலத்தை அகற்ற வேண்டும் என தெரிவித்துவந்தனர்.
துணை தூதரகத்துக்கு கடிதம்
இந்த நிலையில் கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையுடன் கூடிய வழிபாட்டு தலம் அகற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜெபரட்சணம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் கூறி இருப்பதாவது:-
புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ள கச்சத்தீவில் புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக எமக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தங்களுக்கு அறிய தருகிறேன். இவ்விஷயத்தை கடற்படையின் உயரதிகாரிகள் பிஷப் இல்லத்திற்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சத்தீவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த விஷயத்தை அமைதியான முறையில் தீர்த்து வைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும், கச்சத்தீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
,அந்த கடிதத்தில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர், யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோருக்கும் இந்த நகல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.