< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
|23 Aug 2022 9:08 AM IST
குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
குற்றாலம் பகுதியில் சில நாள்களாக மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் நீண்டவரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனா். இந்த சூழலில், நேற்று காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல்மழை பெய்தது.
இதன் காரணமாக, மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீா்வரத்து அதிகரித்தது. அப்போது, தண்ணீருடன் சிறிய அளவிலான கற்கள் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவியைத் தவிர பிற அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.