< Back
மாநில செய்திகள்
நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

தினத்தந்தி
|
3 May 2024 7:24 PM IST

தி.மு.க.வினர் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

மக்களைப் பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, பிரச்சினையின் வீரியத்தை தடுக்கவோ, குறைக்கவோ செய்யாமல், வெறும் விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. ஆட்சிக்கு வந்ததும் 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று ஜம்பமாக அறிவித்து விட்டு, இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் பெருமளவு மழைநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. குறிப்பாக, கடந்த 2022-ம் ஆண்டு, காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுமார் 600 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணானது. ஆனால், தி.மு.க. அரசு அதற்குப் பின்னரும் சுதாரித்துக் கொள்ளவில்லை.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீரில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரையும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்திப் பெற்றுத் தர முடியாமல் இருக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். தமிழகத்தின் உரிமையான 177 டிஎம்சி தண்ணீரில், வெறும் 78.76 டிஎம்சி தண்ணீர் மட்டுமே, 2023-24 ஆண்டில், தமிழகம் பெற்றுள்ளது. பாதியளவு கூட காவிரி நீரைப் பெற்றுத் தராமல், காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை, கர்நாடக காங்கிரஸ் அரசிடம் முழுமையாக அடகு வைத்திருக்கிறார் முதல்வர்.

அதுமட்டுமின்றி, பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும், ஆனைமலை நல்லாறு திட்டம், செண்பகவல்லி அணை சீரமைப்பு முதலானவற்றைச் செயல்படுத்த, இத்தனை ஆண்டுகளாக எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. இதனால், பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல், விவசாயப் பெருமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.

மேலும் அணைகள் தூர்வாரப்படாததால், முழுக் கொள்ளளவில் நீரை தேக்க முடியவில்லை. ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர் தி.மு.க.வினர். இவை எதையும் கண்டுகொள்ளாமல், வழக்கம்போல ஒரு குழு அமைத்து, பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் முனைப்பில் இருக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின்.

ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்பது முதல்-அமைச்சருக்கோ, தி.மு.க. மூத்த அமைச்சர்களுக்கோ தெரியாதா? நிரந்தரத் தீர்வை நோக்கிய ஒரு தொலை நோக்குத் திட்டத்தையேனும் இதுவரை அறிவித்தோ, செயல்படுத்தியோ இருக்கிறதா தி.மு.க.? சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையே மூன்றாண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க., மழை நீரைச் சேகரிக்க, நீர்நிலைகளைத் தூர்வாருவதிலும், சீரமைப்பதிலும் சிறிது கூடக் கவனம் செலுத்தாததன் விளைவே, தமிழகம் முழுவதும் நிலவி வரும் தண்ணீர்ப் பற்றாக்குறையின் அடிப்படை.

கோடைகாலத்தில் நீர்நிலைகளைச் சீரமைப்பது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, தேவையான தடுப்பணைகள் கட்டுவது உள்ளிட்டவை, அடுத்து வரும் மழைக்காலத்தில் தண்ணீரைச் சேமித்து வைக்க உதவும் என்பதும், அடுத்த கோடைக்காலத்தில், தண்ணீர்ப் பற்றாக்குறையில் இருந்து மக்களைக் காப்பாற்ற உதவும் என்பதும் அடிப்படை அறிவுடைய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை.

ஆனால், தி.மு.க.வின் நடவடிக்கைகள், அதற்குச் சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன. எந்தவித தொலைநோக்குத் திட்டங்களும் இல்லாமல், மழைக்காலத்தில் வெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவதும், கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறையில் அல்லல்பட வைப்பதும் தொடர்கதையாகி இருக்கிறதே தவிர, தி.மு.க. அரசு, இதற்கான ஒரு நிரந்தரத் தீர்வு குறித்து சிந்திப்பதே இல்லை.

தற்போதைய தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதே நேரத்தில், இதற்கான நிரந்தரத் தீர்வுக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளை மீட்கும் நடவடிக்கைகளையும், நீர் நிலைகளைச் சீரமைக்கும் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், மழைக்காலம் தொடங்கிய பிறகு தி.மு.க. நடத்தும் வழக்கமான நாடகங்களை எதிர்கொள்ளும் பொறுமையைப் பொதுமக்கள் இழந்து விட்டதால் வடிகால் பணிகளையும் மழைக்காலம் வரை இழுத்தடிக்காமல், முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்