"தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது" - டிடிவி தினகரன்
|தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என கடை உரிமையாளர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.
நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.அதிலும் மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை. தென்காசியில் மட்டுமல்ல,எந்த இடத்திலும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.