< Back
மாநில செய்திகள்
வெள்ள பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பின் நிவாரணம் வழங்கப்படும் - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
மாநில செய்திகள்

வெள்ள பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பின் நிவாரணம் வழங்கப்படும் - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா

தினத்தந்தி
|
24 Dec 2023 1:28 PM IST

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள், நீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி,

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் ஏரல், ஆத்தூர் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது, மழை நின்று வெள்ளநீர் வடிந்து வருகிறது. ஆனால், பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள், நீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடியில் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகள், நீர் வடிகால் பணிகளை சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 750 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளன. இதில் தற்போது 328 குளங்கள் உடைந்த நிலையில் உள்ளன. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட கட்டமைப்பு சேதமடைந்துள்ளதால் மாற்று வழியில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 2 மாவட்டங்களிலும் 175 இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. எனவே போக்குவரத்து சரிசெய்ய முடியாத இடங்களில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. தற்போது 2 மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் வெள்ள பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் , அரசால் முடிந்த அளவிற்கு இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும், என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்