மிக்ஜம் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்...!
|புயல், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6.000 நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
சென்னை,
'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளும், தொழில் நிறுவனங்களும் வெள்ளத்தில் மிதந்தன.
மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை மெல்லமெல்ல திரும்பியது.
இதற்கிடையே 'மிக்ஜம்' புயல், மழையால், சென்னை மாவட்டம் முழுவதுமாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களிலும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக ரூ.1,455 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. வெள்ள நிவாரணம் பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வீடு வீடாக சென்று கடந்த 14-ந் தேதி முதல் 3 நாட்கள் டோக்கன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், புயல், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் உள்ள ரேஷன் கடையில் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், பெரிய கருப்பன் ஆகியோரும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.