மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|வெள்ள நிவாரண தொகையை தமிழக அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நிலவி வந்தது.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.
மழை விட்டு 5 நாட்கள் ஆகியும், இன்னும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடியவில்லை. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. வெள்ள நிவாரண தொகையை தமிழக அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நிலவி வந்தது.
இதற்கிடையில், மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை அறிக்கை வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு;-
"* மிக்ஜம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும்.
* சேதமடைந்த குடிசைகளுக்கு வழங்கப்படும் ரூ.5,000 தற்போது ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 33 சதவீதத்திற்கும் மேல் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும்.
* எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும்.
* வெள்ளாடு, செம்மறியாடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும்.
* முழுமையாக சேதமடைந்த மீன்பிடி வலைகள் உட்பட கட்டுமரங்களுக்கு நிவாரணம் ரூ.50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு நிவாரண நிதி ரூ.10,000-ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* புயல், வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ரூ.5 லட்சம் தரப்படும்.
* புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண தொகை அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக தரப்படும்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.