மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு வாரத்திற்குள் நிவாரண தொகை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
|மிக்ஜம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன் பின்னர், மிக்ஜம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், சேதமடைந்த குடிசைகள், பயிர்கள், படகுகள், கால்நடைகள் உயிரிழப்பு போன்றவற்றுக்கும் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. இந்த நிவாரண நிதி, அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு வாரத்திற்குள் நிவாரண தொகை வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வாரத்திற்குள் டோக்கன் கொடுத்து நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.