மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
|எந்த நிபந்தனையும் இன்றி பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன் பின்னர், மிக்ஜம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், சேதமடைந்த குடிசைகள், பயிர்கள், படகுகள், கால்நடைகள் உயிரிழப்பு போன்றவற்றுக்கும் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. இந்த நிவாரண நிதி, அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறைபாட்டால் மக்கள் அனைத்து உடைமைகளையும் இழந்துள்ளனர்.
வெள்ளத்துடன் கழிவுநீரும் வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் ஒரு வாரமாக வேலைக்கு செல்ல இயலவில்லை. இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்தி அரசு செலவில் பழுதி நீக்கி தரவேண்டும்.
மணலியில் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.25,000 வழங்க வேண்டும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 இழப்பீடாக வழங்க வேண்டும்.
சென்னை மற்றும் புறநகரில் சேதமடைந்த சாலைகளை போர்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். எந்த நிபந்தனையும் இன்றி பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இவ்வறு அவர் கூறியுள்ளார்.