சேலம்
கைக்கான் வளவு நீரோடை திட்டத்தில் கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறப்பு
|கைக்கான் வளவு நீரோடை திட்டத்தில் கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர்தூவி வழிபட்டனர்.
பெத்தநாயக்கன்பாளையம்,
கைக்கான் வளவு
பெத்தநாயக்கன்பாளையம் அருகே சின்னகல்ராயன் மலைத்தொடரில் தெற்குநாடு கிராமத்தில் கைக்கான்வளவு என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே ரூ.7 கோடியே 30 லட்சம் மதிப்பில் தடுப்பணை அமைக்கும் பணிகள் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பெய்த தொடர் மழை காரணமாக கைக்கான்வளவு காட்டாற்றில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி உபரி நீர் கரியகோவில் நீர்த்தேக்கத்துக்கு சமீபத்தில் திறந்து விடப்பட்டது.
இதன்மூலமாக பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவை சேர்ந்த மலையாளப்பட்டி, இடையப்பட்டி, தும்பல், பனைமடல், கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் ஆகிய 6 கிராமங்களில் 6 ஆயிரத்து 200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.
அ.தி.மு.க.வினர் மலர்தூவினர்
கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து மதகு பகுதியில் அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் சிறப்பு வழிபாடு நடத்தினர். அகில பாரதிய சந்த் சமிதி மாநில தலைவர் கருடானந்த மகராஜ் சாமிகள் மதகின் கீழே தண்ணீர் ெசல்லும் இடத்தில் இறங்கி தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளருமான இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும் போது, 'முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் இந்த உன்னத திட்டத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். தான் ஒரு விவசாயியாக இருந்து விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு இந்த திட்டத்தை அறிவித்து அதனை முழுமையாக எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி உள்ளார்' என்றார்.
எம்.எல்.ஏ.க்கள்
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஆத்தூர் ஜெய்சங்கரன், ஏற்காடு சித்ரா, கெங்கவல்லி நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜன், நரசிங்கபுரம் நகராட்சி முன்னாள் காங்கிரஸ் தலைவர் வெங்கடாஜலம், விநாயகம் பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சின்னத்தம்பி, துணை தலைவர் முருகேசன், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மோகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் வாசுதேவன், தகவல் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மலர் தூவி வழிபட்டனர்.