< Back
மாநில செய்திகள்
ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
12 Oct 2023 1:30 AM IST

ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.மேலும் இந்த அணையில் இருந்து குடிநீர் தேவைக்கும், ஒப்பந்தப்படி கேரளாவிற்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் மொத்தம் 44 ஆயிரத்து 350 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இரு மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.


இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அணையின் கரையோரத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீருக்கு மலர்தூவி விவசாயிகள் வரவேற்றனர். விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆ மண்டலத்தில் பொள்ளாச்சி கால்வாய் மூலம் 11,942 ஏக்கர் நிலங்களும், சேத்துமடை கால்வாய் மூலம் 2,529 ஏக்கர் நிலங்களும், ஆழியாறு ஊட்டுக்கால்வாய் மூலம் 2,303 ஏக்கர் நிலங்களும், அ மண்டலத்தில் வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் 5,558 ஏக்கர் நிலங்களும் சேர்த்து மொத்தம் 22,232 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் 20-ந்தேதி வரை 40 நாட்களுக்குள் உரிய இடைவெளி விட்டு 26 நாட்களுக்கு மொத்தம் 831 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தற்போது போதிய மழை பெய்யாததால் அணையில் நீர்இருப்பு குறைவாக உள்ளது, எனவே நீரினை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.




மேலும் செய்திகள்