பெலிக்ஸ் ஜெரால்டை விடுவிக்க வேண்டும்- முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனைவி மனு
|பெலிக்ஸ் ஜெரால்ட் மீதான குற்ற வழக்குகளை திரும்பப் பெற்று அவரை சிறையில் இருந்து விடுவிக்க உதவ வேண்டும் என்று அவரது மனைவி மனுவில் கூறியுள்ளார்.
சென்னை,
அவதூறு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஆஸ்டின், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
டெல்லியில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள எனது கணவர் பெலிக்ஸ் ஜெரால்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். முதல் தலைமுறை பட்டதாரியான அவர், பல்வேறு ஊடகங்களில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
எனது கணவரின் யூடியூப் சேனலில் பேட்டி அளித்தபோது, பெண் போலீசாரை சவுக்கு சங்கர் இழிவாக பேசியதாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் சவுக்கு சங்கரை நேர்காணல் செய்த நெறியாளர் என்ற வகையில் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனது கணவர் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அந்த நேர்காணலை பதிவு செய்யவில்லை. போலீஸ் உயர் அதிகாரிகள், பெண் போலீசாரை இழிவு செய்யும் எண்ணம் எனது கணவருக்கு இல்லை. சவுக்கு சங்கரின் பேட்டியை பதிவேற்றம் செய்ததற்காக ரெட்பிக்ஸ் யூடியூப் சார்பில் வருத்தம் தெரிவித்துள்ளேன். அந்த பேட்டி இடம் பெற்றுள்ள வீடியோவும் அதன் பொதுத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.
எனவே எனது கணவர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீதான குற்ற வழக்குகளை திரும்பப் பெற்று அவரை சிறையில் இருந்து விடுவிக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.