< Back
மாநில செய்திகள்
கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மாநில செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
11 July 2022 2:28 AM IST

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக மற்றும் கேரள மாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 7,500 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 32 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் நேற்று மதியம் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்துள்ளார்.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளை மடம் சோதனைச்சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேட்டூர் அணை

ஒகேனக்கல் வழியாக தண்ணீர் மேட்டூர் அணையை நேற்று வந்தடைந்தது. இதன்மூலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 141 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 149 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடிக்கு மேல் வர தொடங்கினால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.29 அடியாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்