< Back
மாநில செய்திகள்
6 பேர் விடுதலை: கவர்னரின் தமிழர் விரோத போக்குக்கு எதிராக அமைந்தது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு - திருமாவளவன்
மாநில செய்திகள்

6 பேர் விடுதலை: கவர்னரின் தமிழர் விரோத போக்குக்கு எதிராக அமைந்தது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு - திருமாவளவன்

தினத்தந்தி
|
11 Nov 2022 7:34 PM IST

கவர்னரின் தமிழர் விரோத போக்குக்கு எதிராக அமைந்தது சுப்ரீம் கோர்ட்டின் 6 பேர் விடுதலை தீர்ப்பு என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உழன்ற நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரை இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு ஈடேறி உள்ளது. இந்த விடுதலைக்கு ஏதுவாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு குறிப்பாக தமிழக முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேரறிவாளன் விடுவிக்கப்படுவதற்கு அடிப்படையாக இருந்த ஆதாரங்களை முன்வைத்தே இந்த ஆறு பேரையும் விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி நாகரத்னம்மா ஆகியோரின் அமர்வு அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்த முக்கியமான கருத்தையும் தெரிவித்துள்ளது. 'மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தான்' என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படி தனது பொறுப்பை உணர்ந்து அவர் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்துள்ளார் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, தனது கடமை தவறிய பிழையை ஏற்று ஆளுநர் இச்சூழலில் பதவி விலகுவதே சரியாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

விடுதலை செய்யப்படும் இந்த ஆறு பேரில் நளினி, ரவிச்சந்திரன் ஆகிய இருவர் தவிர, மற்ற நால்வரும் இலங்கை நாட்டின் குடிமக்கள் ஆவர். சிறையில் இருந்த காலத்தில் அவர்களின் நடத்தை பாராட்டத்தக்கதாக இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் ஆதாரங்களோடு பதிவு செய்திருக்கிறது. எனவே இலங்கையைச் சேர்ந்த அந்த 4 பேரும் தமது நாட்டுக்கோ அல்லது வேறு அயல்நாடுகளுக்கோ செல்ல விரும்பினால் அதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே , இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கு இந்திய ஒன்றிய அரசு அனுமதித்தது என்பதையும் இங்கே சுட்டி காட்டுகிறோம். அவர்கள் தமிழகத்தில் வாழ விரும்பினாலும் அதற்கு அனுமதிப்பதுடன் உரிய உதவிகளையும் செய்திட வேண்டுகிறோம்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இரண்டு முக்கியமான அம்சங்களை சுட்டிக்காட்டுகிறது: அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனை குறைப்புச் செய்வதற்கு மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது என்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுபோல் நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களுக்கு அவர்களது நன்னடத்தையைக் கணக்கில்கொண்டு, அவர்கள் தண்டனைக் குறைப்புக்குத் தகுதியானவர்களாக இருந்தால் அவர்களையும் விடுவிப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு ஆளுநர் இந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அவரது அதிகார வரம்பைப் புரிந்து கொண்டு தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பி உள்ள சட்ட மசோதாக்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்