திருச்சி
காவிரி-கொள்ளிடத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
|காவிரி-கொள்ளிடத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரி-கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு
கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மழை தீவிரமடைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வந்து அங்கிருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்படுகிறது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடிநீர் வந்தது. இதில் காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கனஅடியும், கொள்ளிடத்தில் 95 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கை
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணை, கொள்ளிடம் ஆற்றில் நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் வட்டம், நெ.2 கரியமாணிக்கம் ஊராட்சி, சிறுகாம்பூர் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அரிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதை தொடர்ந்து, கரை அரிப்பை தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கலெக்டர் பிரதீப்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம் உடனிருந்தார்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மணப்பாறை-6.80, பொன்னணியாறுஅணை-9.80, கோவில்பட்டி-13.20. மாவட்டத்தில் சராசரியாக 1.24 மி.மீட்டரும், ஒட்டுமொத்தமாக 29.80 மி.மீட்டரும் மழை பதிவானது.