< Back
மாநில செய்திகள்
நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகள் வழங்கிடவேண்டும்: பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாநில செய்திகள்

நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகள் வழங்கிடவேண்டும்: பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தினத்தந்தி
|
5 Feb 2023 1:05 PM IST

தஞ்சையில் நெற்பயிர் பாதிப்புகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.

சென்னை,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்தன.

சில இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. 2 நாட்களாக பெய்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் தவித்தனர்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரியிடப்பட்ட நெற்பயிர்கள் சேதமடைந்ததால், உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து நெற்பயிர் பாதிப்புகளை ஆய்வுசெய்த அமைச்சர் சக்கரபாணி, டெல்டா மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளது என்றும், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நிவாரணம் அறிவிப்பார் என்றும் பேட்டியளித்தார்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், காவிரி டெல்டா பகுதிகளில் பருவம் தவறி பெய்த கனமழையால், நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், எனவே, காவிரி டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகளை வழங்கிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், முதிர்ச்சியடையாத, கருகிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3லிருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்