முதுநிலை மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணியாற்றுவதில் தளர்வு - தமிழக அரசு அரசாணை
|அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பமில்லாதவர்கள் ரூ.40 லட்சம் கட்ட வேண்டும் என்ற விதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதியில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
முன்னதாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. தற்போது அதனை ஓராண்டாக குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிப்பை முடித்த பிறகு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பமில்லாதவர்கள் ரூ.40 லட்சம் செலுத்த வேண்டும் என்ற விதியை மாற்றி, ரூ.20 லட்சம் செலுத்தினால் போதும் என்றும், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் ரூ.20 லட்சத்துக்கு பதிலாக ரூ.10 லட்சம் செலுத்தினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.