< Back
மாநில செய்திகள்
கொட்டும் மழையில் பெண் பிணத்துடன் உறவினர்கள் மறியல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கொட்டும் மழையில் பெண் பிணத்துடன் உறவினர்கள் மறியல்

தினத்தந்தி
|
12 Nov 2022 12:15 AM IST

பழனி அருகே கொட்டும் மழையில் பெண் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி அருகே உள்ள காவலப்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 27). சூளை தொழிலாளி. அவருடைய மனைவி மவுலியா (24). கர்ப்பிணியான இவர், கடந்த 9-ந்தேதி பழனி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் மவுலியாவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர், மேல் சிசிக்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மவுலியாவின் உடல் காவலப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையே மவுலியாவின் உடல் வந்த ஆம்புலன்சை அவரது உறவினர்கள், பொதுமக்கள் பழனி-கொழுமம் சாலையில் காவலப்பட்டி பிரிவு பகுதியில் நிறுத்தினர். பின்னர் அவர்கள், கொட்டும் மழையில் பிணத்துடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பழனி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சரியான சிகிச்சை அளிக்காததே மவுலியா உயிரிழப்புக்கு காரணம் என்றும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக பழனி-கொழுமம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்