திண்டுக்கல்
கொலையாளிகளை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
|திண்டுக்கல் அருகே தொழிலாளியை ெகாலை செய்த வழக்கில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், மதுமிதா (12), சாருலதா (10) ஆகி மகள்களும் உள்ளனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக திண்டுக்கல்லை அடுத்த எருமைநாயக்கன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் ஆந்திராவுக்கு சென்று வேலை செய்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் மனைவி, குழந்தைகளை பார்க்க எருமைநாயக்கன்பட்டிக்கு வந்தார். மேலும் நேற்று முன்தினம் இரவு சந்தானவர்த்தினி ஆற்றுக்கு செல்லும் பாதையில் அமர்ந்து கருப்பையா தனது நண்பர்களுடன் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் கருப்பையாவை அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும் அவருடைய நண்பர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே கருப்பையாவின் உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் வழங்கப்பட்டது. ஆனால் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கருப்பையாவின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.