திருவள்ளூர்
திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
|திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த பிளேஸ்பாளையம் அல்லிக்குழி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 36). இவரது மனைவி சந்தியா (24). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்பு சந்தியா கர்ப்பமானார். இவர் கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். 9 மாதத்திற்கு பின்பு கடந்த 5-ந் தேதி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
பின்னர் 8-ந் தேதி அவருக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. நர்ஸ்கள் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்திருக்கிறது ஆகவே வெண்டிலேட்டரில் வைக்க வேண்டும் என்று கூறி தாயிடமும் உறவினர்களிடமும் காட்டாமல் குழந்தையை கொண்டு வெண்டிலேட்டரில் ஒரு வாரமாக வைத்தனர்.
சந்தியா குழந்தையை பார்க்க வேண்டும் என்று நர்ஸ்களிடம் சண்டையிட்டதால் குழந்தையை தூரத்திலிருந்து பார்க்க அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சந்தியாவிடம் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா மற்றும் உறவினர் ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர்கள், நர்ஸ்கள் அஜாக்கிரதை காரணமாகவே குழந்தை இறந்ததாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி டீன் அரசி ஆகியோர் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இதுகுறித்து முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.