< Back
மாநில செய்திகள்
டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

பட்டுக்கோட்டையில் கர்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை:

நிறைமாத கர்ப்பிணி

பட்டுக்கோட்டை தாலுகா மிலாரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது24) கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கவிநிலா (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிநிலாவை நாட்டுச்சாலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்த்து வந்தனர்.

இதற்கிடையில் கவிநிலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்துக் கொள்வதாக கூறி சிகிச்சை அளித்த ஆவணங்களை உறவினர்கள் கேட்டுள்ளனர்.

வயிற்றிலேயே இறந்த குழந்தை

இந்த நிலையில் கவிநிலாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு கவிநிலாவை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சாலை மறியல்

பிறகு கவிநிலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் இறந்த நிலையில் இருந்த ஆண் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தனர். பின்னர் அங்கு கவிநிலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு கவிநிலாவின் உறவினர்கள் நாட்டுச்சாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நாட்டுச்சாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் வயிற்றிலேயே குழந்தை இறந்தது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்