கடலூர்
டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
|ராமநத்தம் அருகே பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலியானார். இவரது சாவுக்கு காரணமான டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநத்தம்
விபத்தில் வாலிபர் பலி
ராமநத்தத்தை அடுத்த வ.சித்தூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). பெரம்பலூரில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்த இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது பின்னால் தச்சூரை சேர்ந்த கண்ணன் மகன் காா்த்திக்(21) என்பவர் ஓட்டி வந்த பொக்லைன் எந்திரம் மோதியதில் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
சாலை மறியல்
இந்த நிலையில் மணிகண்டனின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று சித்தூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள தொழுதூர்-ஆத்தூர் சாலையில் திரண்டனர். அப்போது மதுபோதையில் பொக்லைன் எந்திரத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கார்த்திக்கை கைது செய்ய வேண்டும். மணிகண்டனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் மரக்கட்டைகள் மற்றும் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமநத்தம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.