< Back
மாநில செய்திகள்
இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிப்பு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிப்பு

தினத்தந்தி
|
7 Oct 2023 12:46 AM IST

விராலிமலை அருகே இடப்பிரச்சினையால் இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவரது உறவினர்கள் பல மணி நேரம் தவித்தனர். பின்னர் இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

மூதாட்டி சாவு

விராலிமலை தாலுகா கத்தலூர் ஊராட்சி அக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மனைவி நாகலெட்சுமி (வயது 65). இவர் நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் நேற்று எடுத்துச்சென்ற போது அடக்கம் செய்யும் பகுதியானது எங்களது அனுபவத்தில் உள்ளது என சிலர் வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஏற்கனவே அக்கல்நாயக்கன்பட்டியில் பல ஆண்டுகளாக இறந்தவர்களை எங்கு அடக்கம் செய்வது என்பதில் இருதரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது. அதன் காரணமாக ஒரு தரப்பினர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டதையடுத்து இருதரப்பினரையும் அழைத்து விராலிமலை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது.

மறியல்

இந்த கூட்டத்தில் வருவாய்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் புதிய இடத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நாகலெட்சுமியின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய சென்றபோது அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பினர் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த நாகலெட்சுமியின் உறவினர்கள் விராலிமலை தாலுகா ராசநாயக்கன்பட்டியில் உள்ள திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை இடையபட்டி பிரிவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து, இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இறந்த நாகலெட்சுமியின் உடலை இன்று (சனிக்கிழமை) ஏற்கனவே வழக்கமாக அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்வது எனவும், இனி வரும் காலங்களில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் புதிதாக ஒதுக்கப்பட்ட மயானத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்