ஈரோடு
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் பூபதி என்கிற பிரபாகரன் (வயது 30). இவருடைய நண்பர் ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகரை சேர்ந்த குட்ட சாக்கு என்கிற லோகேஸ்வரன் (23). இவர்கள் 2 பேர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி ஈரோடு மேட்டூர் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வரும் ஒருவரை தாக்கி, அவருடைய கழுத்தில் கிடந்த 6½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பூபதி என்கிற பிரபாகரனையும், குட்டசாக்கு என்கிற லோகேஸ்வரனையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள், இருவரும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு, ஈரோடு கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேற்று பிரபாகரனையும், லோகேஸ்வரனையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், ஏற்கனவே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபாகரன், லோகேஸ்வரன் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.