மதுரை
சிறையிலேயே பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்: சொத்து பதிவுகளுக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
|சொத்து பதிவுகளுக்காக பதிவுத்துறை அலுவலகங்களுக்கு கைதிகள் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், இதற்காக கைதிக்கு பரோல் வழங்க முடியாது என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சொத்து பதிவுகளுக்காக பதிவுத்துறை அலுவலகங்களுக்கு கைதிகள் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், இதற்காக கைதிக்கு பரோல் வழங்க முடியாது என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பரோல் கேட்டு வழக்கு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜேசுவரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என் கணவர் உமாசங்கர். கடலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். என் மாமியார் பெயரில் உள்ள சொத்துகளுக்கு என் கணவர்தான் சட்டப்பூர்வ வாரிசு. அவர் சிறையில் இருப்பதால் என் மாமியார் பெயரில் உள்ள சொத்துகளை என்னுடைய பெயருக்கு பவர் எழுதி வாங்க முடிவு செய்தோம். இதற்கு என் கணவர் பதிவுத்துறை அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக வேண்டியுள்ளது. எனவே அவருக்கு ஒரு வாரம் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
அரசு வக்கீல் ஆட்சேபம்
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல் குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அரசு வக்கீல் திருவடிக்குமார் ஆஜராகி, சொத்துகளை பவர் கொடுப்பது தொடர்பாக அவரது கணவர் பதிவுத்துறை அலுவலகத்துக்கு நேரில் வரத்தேவையில்லை என்பதால், அவருக்கு பரோல் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
பல்வேறு தண்டனை கைதிகள், சிறை சூப்பிரண்டுவின் அனுமதியுடன் தங்கள் சொத்துக்களை உரிய நபர்களுக்கு பவர் கொடுக்கலாம் என்று தமிழ்நாடு சிறை விதிமுறைகள் கூறுகின்றன. அதேபோல சொத்து பதிவுகளுக்காக கைதிகள் பதிவுத்துறை அலுவலகத்துக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து பதிவுத்துறை விதிமுறைகள் அனுமதிக்கின்றன.
பரிசீலிக்க தேவையில்லை
மேலும் சொத்து பதிவுகள் குறித்து சம்பந்தமாக சார்-பதிவாளரே நேராக சிறைக்கு சென்று சம்பந்தப்பட்ட கைதியிடம் விசாரித்து பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் சட்டம் கூறுகிறது. எனவே மனுதாரர் கணவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க தேவையில்லை.
மனுதாரர் தனது பெயருக்கு பவர் பெறுவது குறித்தும், இது தொடர்பான பதிவுத்துறை நடவடிக்கைகளில் தன் கணவர் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கடலூர் டி.ஐ.ஜி., பதிவுத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அதிகாரிகள் மனுதாரரின் கோரிக்கையை 4 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.