மயிலாடுதுறை
வழக்குகள் பதிவு
|மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது 4,407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது 4,407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகன தணிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு நேரங்களில் குற்ற தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட எல்லைகளில் உள்ள 5 சோதனைச்சாவடிகளில் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் 4 போலீசார்களை கொண்டு வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் குடிபோதையில் வாகனம் இயக்கியவர்கள் மீது 251 வழக்குகள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது 4,407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகன தணிக்கையானது வலுப்படுத்தப்பட்டுள்ளது.
16 வான்செய்தி கருவிகள்
போலீஸ் ரோந்திற்காக கூடுதலாக 16 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த போலீஸ் ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு வாகனங்களின் இயக்கம் மற்றும் ரோந்து செல்லும் பகுதியானது ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் மாவட்ட கட்டுப்பாட்டு அறையினால் கண்காணிக்கப்படுகிறது.
இந்த போலீஸ் ரோந்து வாகனங்களின் துரித தகவல் பரிமாற்றத்திற்கு கூடுதலாக 16 வான்செய்தி கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளிலும் இந்த போலீஸ் ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு துரித தகவல் பரிமாற்றத்தின் மூலம் போக்குவரத்து நெரிசலானது ஒழுங்குபடுத்தப்படுகிறது.
எப்.ஆர்.எஸ். செயலி மூலம் சோதனை
இரவு நேரங்களில் குற்ற நிகழ்வு பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்கப்படுகிறது. சந்தேகத்திற்கிடமாக காணப்படும் நபர்களை எப்.ஆர்.எஸ். செயலி மூலம் சோதனை செய்யப்படுகிறது. மேலும், ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் வாகனங்களின் பதிவெண்ணை கொண்டு வாகன உரிமையாளரின் விவரம் மற்றும் வாகனம் குறித்த வழக்கு விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.