விரட்டியதும் ஓடும் காக்கா கூட்டம் பா.ஜ.க. அல்ல - பா.ஜ.க. மாநில துணைத்தலைவர்
|விரட்டியதும் ஓடும் காக்கா கூட்டம் பா.ஜ.க. அல்ல என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் பதில் அளித்தார்.
ஒற்றுமை கூட்டம்
பா.ஜ.க. குறித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்து குறித்து பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-
காக்காவின் மகத்துவம் செல்லூர் ராஜூவுக்கு புரியாது. நம்முடைய மூதாதையர்கள் அனைவரும் காக்காவாக இருப்பதால்தான் எல்லா சாமியையும் கும்பிடும்போது காக்காவுக்கு சாப்பாடு வைத்துவிட்டு, சாப்பாடு சாப்பிடுகிறார்கள். அந்த ஊரில்தான் நாம் இருக்கிறோம். காக்காவை அவர் மட்டமாக பேசக்கூடாது.
பல கட்சிகளுக்கு போய்விட்டு வந்து கொண்டிருக்கிற காக்கா கூட்டங்கள் பா.ஜ.க.வில் இல்லை. விரட்டியதும் ஓடும் காக்கா கூட்டம் பா.ஜ.க. அல்ல. இது ஒற்றுமை கூட்டம். எந்த மாற்றத்தையும் தரக்கூடிய சக்தி படைத்த கூட்டம். இதை எளிதாக கடந்து போய்விட முடியாது.
234 தொகுதிகளிலும் வெற்றி
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்துதான் போட்டியிட்டது. பா.ஜ.க. தனித்து போட்டியிட சக்தி இல்லாமல் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு 488 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
அ.தி.மு.க.வினர் பலர் பா.ஜ.க.வை அப்போது விட்டுவிட்டீர்களே என்று வருத்தப்பட்டு பேசினார்கள். ஏன் எடப்பாடி பழனிசாமியிடமே அதை பற்றி புகாராக கூறியிருக்கிறார்கள். எனவே செல்லூர் ராஜூ இப்படி பேசக்கூடாது. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற அண்ணாமலை ஆசைப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.