தேனி
சுகாதாரமற்ற கழிப்பறை குறித்து 'கியூ ஆர்' கோடு மூலம் புகார் செய்யும் வசதி :பெரியகுளம் நகராட்சியில் 29 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது
|சுகாதாரமற்ற கழிப்பறை குறித்து கியூ ஆர் கோடு மூலம் புகார் செய்யும் வசதி பெரியகுளத்தில் 29 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரப் பகுதியில் உள்ள அனைத்து சமுதாய பொது கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கான கழிப்பறைகள் குறித்து பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை நகராட்சிக்கு தெரிவிக்கும் வகையில் அனைத்து கழிப்பறைகளிலும் 'கியூ ஆர்' கோடு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த 'கியூ ஆர்' கோடு மூலம் தங்களது செல்போனில் இருந்து பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கருத்துகளை பதிவு செய்யலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கழிவறைகளை முறையாக பயன்படுத்தி, திறந்த வெளி மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த கியூ ஆர் கோடு பலகைகள் நகராட்சியில் 29 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நகராட்சி ஆணையர் புனிதன் தெரிவித்தார்.